நாட்டினுள் விசேட பாதுகாப்பு ஏற்பாடு 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 

பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று(24.04) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 

உமா ஓயா திட்டம், ஈரானிய நிறுவனங்களின் பாரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், ஈரானிய ஒப்பந்ததாரர்களால் வெளிநாடு ஒன்றில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டமாகும். 

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்று(24.04) விசேட போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நாளை பிற்பகல் கொழும்பில் பல வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

அதன்படி, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மூடப்படவுள்ளது. 

மேலும் அதிவேக வீதியில் இருந்து பேலியகொட, ஒருகொடவத்த சந்தி, தெமட்டகொட, பொரளை, டி.எஸ்.சேனநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், ஹோர்டன் சுற்றுவட்டம், கிரீன் பாத்,  நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், ஆர் ஏ டி மெல் மாவத்தை, சாந்த மைக்கல் வீதி, காலி வீதி இருந்து கோட்டை வரையிலான வீதி, ஹில்டன் ஹோட்டல் வரையான வீதி ஆகிய மூடப்படவுள்ளன.

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு பின்னர் மூடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து காலி வீதி உட்பட பல வீதிகள் மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் இரவு 7.30 மணிக்கு பின்னர் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பாதை மூடப்படவுள்ளதுடன் இரவு 9.30 மணிக்கு பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து NSA சுற்றுவட்ட காலி வீதி உட்பட பல வீதிகளும் மூடப்படவுள்ளன. 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இரவு 9.30 முதல் இரவு 10.30 வரை மூடப்படவுள்ளது. 

மேலும், நாளை காலை 9.30 முதல் 11 மணி வரை மத்தள முதல் உமா ஓயா வரையான வீதி சில மணி நேரம் மூடப்படவுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மீண்டும் வீதி மூடப்பட்டு மத்தள விமான நிலையத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply