இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்
ஆரம்பிக்கப்பட்டது.
சீரற்ற காலநிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் அந்த பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை
விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாகப்பட்டினத்திலிருந்து செரியபாணி என்ற கப்பல் சேவையை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை – இலங்கை இடையே பயணம் செய்ய
இருப்பதாகவும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நாகையிலிருந்து காலை 08 மணிக்கு கப்பல் புறப்பட்டு மதியம் 12
மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6
மணிக்கு நாகையைச் சென்றடையும்.
இரு வழிப் பயணத்துக்கு இலங்கை ரூபாப்படி அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படும் தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் மொத்தமாக 150 இருக்கைகள் இருப்பதாகவும் ஒரு வழிப் பயணத்துக்கான நேரம் நான்கு மணித்தியாலம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் நுழைவுச்சீட்டு விற்பனை முகவர் நிலையம் யாழ் மருத்துவமனை வீதியில் இயங்கும் எனவும் சென்னை,
திருச்சி ஊடாக சர்வதேச பயண ஒழுங்குகளை செய்வோரின் வசதிக்காகவும், ஏனையோரின் இலகுவான அணுகுமுறைக்காகவும்
நேரடியாக இணையத்திலும் நுழைவுச்சீட்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.