“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்

போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

குறுகிய காலத்தில் இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்த தருணத்தில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியையும் 100 மெட்ரிக்தொன் மருந்துகளையும், 500 மெட்ரிக்தொன் பால்மாவையும் வழங்கி மக்களுக்கு உதவியளித்திருந்தார்.

எவர் உதவி செய்தாலும் அவருக்கு நன்றி கூறுவது இ.தொ.காவின் மான்பு. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்“ என்ற அடிப்படையில் எத்தருணத்திலும் எமது இலக்கில் இருந்து விடுபட மாட்டோம்.

இ.தொ.காவின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியையும் மக்களாகியய உங்களையும் காப்பாற்றும் பணியில் ஒரு அடியேனும் பின்வைக்க மாட்டேன்.”

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும் தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். இ.தொ.கா.வின் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கற்பித்ததும் அதுதான்.

எதிர்காலத்திலும் இ.தொ.கா சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கின்றனர்.

உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுக்கொடுத்ததே காங்கிரஸ்தான் என அவர்களுக்கு கூறுகிறோம். கம்பனிகளுக்கு ஆதரவாக காங்கிரஸை ஊடங்களில் குறை சொல்கின்றனர்.

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாத கம்பனிகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தைகூட நடத்துவதில்லை இவர்கள். ஆனால், மக்களுக்காக போராடும் இ.தொ.காவுக்கு எதிராக கதைகளையும் கூறுகின்றனர்.

இது ஒரு நாகரீமாகிவிட்டது. அதற்கு இன்று இந்தக் கூட்டத்தின் ஊடாக பதில் அளிக்கிறோம். இ.தொ.காவால் மாத்திரம்தான் இலங்கையில் மூன்று நாட்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூட்ட முடியும்.

இ.தொ.காவுக்கான கட்டமைப்பை எமது முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தருணத்தில் உரிமைகளற்ற சமுதாயமாக நாம் இந்த நாட்டில் இருந்தோம்.

இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பலத்தின் ஊடாக போராடி இன்று இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு சமமாக படி படியாக உரிமைகள் பெற்ற சமூகமாக மலையக மக்களையும் மாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாகும்.

அனைவரும் வரலாறுகளை மறந்துவிடுகின்றனர். தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் தந்தை செல்வா தமது கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கைகோர்த்திருந்தார்.

Social Share

Leave a Reply