10 ஓவர்களினுள் வெற்றியிலக்கை கடந்த ஹைதராபாத் அணி – IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 

இந்த போட்டியில், இலங்கையை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார்.  

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியிருந்த நிலையில், அவரின் இடத்திற்கு வியாஸ்காந்த் இணைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதல் ஐபிஎல் போட்டியில் இன்று(08.05) களமிறங்கியிருந்தார். 

ஹைதராபாத்தில் இன்று(08.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி 55 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் பந்து வீசிய விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் விக்கெட்டுகள் எதனையும் பெறாமல் 27 ஓட்டங்களை மாத்திரம் வழங்கியிருந்தார்.  

166 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தது. ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 89 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ஹைதராபாத் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், லக்னோ அணி 12 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளது. 

இதேவேளை, 12 போட்டிகளில் பங்கேற்று 8 புள்ளிகளுடன் தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ள மும்பை அணி, இவ்வருட ஐபிஎல் தொடரின் Playoffs சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை இழந்த முதல் அணியாக பதிவாகியது. 

Social Share

Leave a Reply