T20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் நேற்று(13.05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

வனிது ஹசரங்க தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி இன்று (14.05) காலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

வீரர்களை ஊக்குவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதோடு, நாட்டிற்கு சிறந்த வெற்றியுடன் வருமாறு அவர்களை வாழ்த்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற முதலாவது பிரிவு ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணியும் நேற்று (13.05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது.

பல வருடங்களின் பின்னர் ரக்பி விளையாட்டில் கிடைத்துள்ள இந்த வெற்றியையிட்டு நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, வீரர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version