LPL ஏலம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஏலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஏலம் தொடர்பிலான ஊடக சந்திப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று(17.05) கொழும்பில் நடைபெற்றது.

இரண்டாவது வருடமாக வெற்றிகரமாக ஏலம் நடைபெறவுள்ளதாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்கொடா தெரிவித்தார். 616 வீரர்கள் ஏலத்துக்கு விண்ணப்பித்ததாகவும் அதிலிருந்து 320 வீரர்கள் தெரிவு செயயப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் இலங்கை தெரிவுக்குழுவினரால் 140 வீரர்களது பெயர் வழங்கப்பட்டதாகவும், முன்னணி கழகங்களிலிருந்து 40 வீரர்களின் பெயர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறிய அவர் இம்முறை பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் LPL போட்டி தொடருக்கான ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

ஐந்து அணிகளும் தலா 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அல்லது நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சகல அணிகளும் அந்த வாய்ப்புகளை பாவித்துள்ளனர். ஏனைய 14 தொடக்கம் 18 வீரர்களை அணிகள் பெற்றுக்கொளவதற்கான ஏலமே நடைபெறவுள்ளது. இம்முறை 23 வயதுக்குட்ப்பட்ட வீரர் ஒருவர் அணியில் கட்டாயம் விளையாட வேண்டுமென்ற விதிமுறையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் தம்புள்ளை அணிகளது உரிமையாளர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நீக்கப்பட்டு புதிய உரிமையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இருந்த உரிமையாளர்கள் கொடுப்பனவுகள் தொடர்பிலான விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் அவர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறிய தொடங்கொட கண்டி அணியின் உரிமையை பெற மூவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் கண்டி அணிக்கான உரிமையாளர் உறுதி செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply