இறுதி அணியாக Playoffs சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு..! 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் Playoffs சுற்றுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதிப் பெற்றுக்கொண்டது. Playoffs சுற்றுக்குள் நுழையும் இறுதி வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதன் ஊடாக Playoffs சுற்றுக்கு தகுதிப் பெற்றுக்கொண்டது. 

இந்த போட்டிக்கு முன்பு, 12 புள்ளிகளுடன் தரவரிசையில் 7ம் இடத்திலிருந்த பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றியீட்டுவதுடன், சென்னை அணியை விட அதிகளவான Net Run Rate புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக Playoffs சுற்றுக்குள் நுழைய முடியும். 

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெங்களூரு மைதானத்தில் நேற்று(18.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பெங்களூரு அணி சார்பில் அணி தலைவர் டியூ பிளசிஸ் 54 ஓட்டங்களையும், விராட் கோலி 47 ஓட்டங்களையும், ராஜட் பட்டிதர் 41 ஓட்டங்களையும், கமரூன் கிரீன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

சென்னை அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்ததுடன், Playoffs சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கு 201 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது. இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்ததுடன்,  Playoffs சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்கான வாய்ப்பினையும் இழந்தது. 

சென்னை அணி சார்பில் ரச்சின் ரவீந்திர 61 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 42 ஓட்டங்களையும், எம்.எஸ். தோனி 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பெங்களூரு அணி சார்பில் பந்துவீச்சில் யாஷ் தயால் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.  

இதன்படி, இந்த போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், Playoffs சுற்றுக்கு தகுதிப் பெற்றுக்கொண்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூரு அணித் தலைவர் டியூ பிளசிஸ் தெரிவு செய்யப்பட்டார். 

தொடரின் முதல் 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியிருந்த பெங்களூரு அணி, இறுதியாக பங்கேற்க 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி, Playoffs வாய்ப்பினை பெற்றுக்கொண்டது. அதன்படி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2024ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version