தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா நேற்று(22.05) இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஸை சந்தித்து, மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அவருடன் பயணித்த வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லா மற்றும் உயிரிழந்த தூதுக் குழுவினருக்காக ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
உலக இஸ்லாமியர்களின் பொது விரும்பியாகவும், உலகத்தில் அநியாயத்திற்கு எதிராக பாடுபட்டு சமாதானத்தை ஏற்படுத்த பிரயத்தனம் மேற்கொண்ட
ஈரான் ஜனாதிபதியின் பேரிழப்பையும், கவலையையும் ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு பகிர்ந்துகொண்டார்.
மக்களின் மனங்களின் வாழும் அத் தலைவருக்காக நாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஜனாஷா தொழுகையில் ஈடுபட்டு அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும், கண்ணியத்துக்குரிய உலமாக்களையும், பள்ளிவாசல் நிருவாகத்தினரையும், இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களையும் ஏ.எல்.எம் அதாஉல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.