இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெப்பத்தினால் ஏற்பட்ட நோய் நிலமையின் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்ககலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், உயிரிழப்புகளுக்கான காரணம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவின் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை, ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நேற்று(23.05) 48.8 செல்சியசாக பதிவாகியிருந்த நிலையில், குறித்த பகுதியில் 2 கூலித் தொழிலாளர்கள் கடும் வெப்பத்தினால் உயிரிழந்துள்ளனர். கடும் வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படும் என ராஜஸ்தானின் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று(23.05) அதிகபட்ச வெப்பநிலை 45 செல்சியசாக பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதினருக்கும் கடும் வெப்பத்தினால் நோய் நிலைமைகள் ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவும் சூழ்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. சில தாழ் நிலப்பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.