அரசாங்கத்தின் புதிய பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
புதிய பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் பாராளுமன்றத்தில் அவசரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, குறித்த சட்ட மூலத்தில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த உப பிரிவுகள் காணப்படுவதாகவும், உள்ளூர் தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள வணிகர்களை நெருக்கடிக்கு உட்படுத்தும் உப பிரிவுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தினால் பாதிக்கப்படும் தரப்பினர் சார்பாக இந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சட்டமூலம் தொடர்பான தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் குறித்த சட்டமூலத்தை ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புதிய சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் என்பதினால், இதனை எதிர்க்குமாறு பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்களிடம் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.