தன்சல்களின் சுகாதார தரம் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக, வெசாக் பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களின் சுகாதாரத் தரம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தன்சல்களில் சுகாதார நடைமுறைகளை பரிசோதிப்பதை தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பற்றதாக அல்லது நுகர்வுக்கு உகந்த நிலையில் இல்லையென்றால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும், சில தன்சல்கள் உரிய சுகாதாரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இத்தகைய தன்சல்களை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக இவ்வருடம் தன்சல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply