பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை கைதிகளையும், இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் தத்தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல்(ஓய்வு) ரவீந்திர சந்திர ஸ்ரீவிஜய் குணரத்ன மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கிடையில் நேற்று(25.05) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 43 பாகிஸ்தான் பிரஜைகளை, பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் 43 பேரை, பாகிஸ்தானுக்கு மீள அழைத்து வருவதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சு கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் சகலவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் கைதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் சில நாட்களில் நிறைவடையும் என என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.