ஜனாதிபதியின் பயணப் பாதையை மாற்ற முற்படுவது நாட்டுக்கே ஆபத்து – ஆனந்தகுமார்

“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு பொருத்தமான அரசியலையே ஜனாதிபதி நடத்திவருகின்றார் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

கட்சி செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பயணப் பாதையை மாற்ற முற்படுவது நாட்டுக்கே ஆபத்தாக அமையும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து ரணிலுக்கு பேராதரவு வழங்க வேண்டும்.

அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு பொறிமுறையை ஜனாதிபதி நிச்சயம் உருவாக்குவார் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி தொழில் ஆணையாளரால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பள உயர்வை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என்ற தொனியில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனை நாம் வரவேற்கின்றோம். அவருக்கு எமது முழு ஆதரவையும் இது விடயத்தில் வழங்குவோம்.

நஷ்டம் என்ற புராணத்தை பல சதாப்தங்களாக கம்பனிகள் ஓதிவருகின்றன. இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. பெருந்தோட்டங்களின் நில உரிமை என்பது அரசாங்கம் வசமே உள்ளது.

அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பே குத்தகை ஊடாக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கம்பனிக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்களுக்கு முறையாக நிர்வாகம் செய்ய முடியாவிட்டால், அரசிடம் தோட்டங்களை ஒப்படைக்க வேண்டும். அப்போது மாற்று பொறிமுறையொன்றை உருவாக்ககூடியதாக இருக்கும்.

அதேவேளை தற்போதைய ஜனாதிபதியின் பதவி நீடிக்க வேண்டும். அப்போதுதான் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வரும்.

2022 இல் நாடு எங்கு இருந்தது தற்போது எங்கு உள்ளது? எனவே, மீண்டும் இருண்ட யுகத்துக்கு சென்றுவிடக்கூடாது.

நாடும், நாமும் முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் நாளை நமதாக வேண்டுமெனில் ரணிலுக்கு பேராதரவு வழங்குவதே ஒரே வழியாகும்.” என சுப்பையா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply