கோல்ப் விளையாட்டினை பயில்வதற்கான முதலாவது பயிற்சி நிலையம்(அக்கடமி) நேற்று விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு பொரளை காசல் வைத்தியசாலைக்கு முன்னதாக உள்ள பகுதியில் இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொண்டோர் கோல்ப் அக்கடமி எனும் பெயரில் ஆர்மபிக்கப்பட்டுள்ள இந்த அக்கடமி அதி நவீன தொழில்நுட்ப முறையில் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாதனங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
கோல்ப் பயில விரும்புபவர்கள், கோல்ப் விளையாட்டை ஆரம்பிக்க முயலும் சிறுவர்கள், மாணவர்கள் இங்கே நல்ல ஆரம்பத்தை பெற முடியும். கோல்ப் விளையாட்டில் பாண்டித்யவம் பெற்றவர்களினால் இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பு. இதன் மூலமாக உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என நம்பலாம்.
இலங்கையில் கோல்ப் விளையாட்டை வளர்க்க ஜனாதிபதி அறிவுரை வழங்கியதாகவும், கோல்ப் சுற்றுலா துறையை முன்கொண்டு செல்ல பல திட்டங்கள் உள்ளதாகவும், அது தொடர்பில் வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆரம்ப நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கோல்ப் இலங்கைக்கு பதக்கத்தை தரக்கூடிய விளையாட்டு எனவும், அதனை குறிவைத்து செயற்படவேண்டும் எனவும் மேலும் அவர் கூறினார். இலங்கையில் கோல்ப் விளையாட ஐந்து திடல்களே உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒவ்வொரு திடலையாவது உருவாக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
கொண்டோர் அக்கடமி, இலக்கம் 175ம் காசல் வீதியில் அமைந்துள்ளது. நேரடியாக சென்று அங்கு மேலதிக விபரங்களை பெற முடியும்.