ISIS பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணை செய்ய சிறப்பு குழு  

இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்புக் குழுவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படையிலுள்ள அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கடுவலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்கள் கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகள் குறித்து தனக்கு தினமும் விளக்கமளிக்க படுவதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், விசாரணையில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து வினவியபோது, அதனை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் பயங்கரவாதிகள் எனும் சந்தேகிக்கும் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவின் அகமதாபாத் நகரில் கடந்த 20ம் திகதி திங்கட்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அகமதாபாத் விமான நிலையம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

பெரியமுல்லை பகுதியை சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஸ் மற்றும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுள் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 2004ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான நியாஸ் நௌபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply