ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லமாட்டார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற முடியுமென்றால், அவர் உறுதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார் என கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தேர்தல் தொடர்பான திட்டங்களும் தொலைநோக்கு பார்வையும் இல்லாத காரணத்தினால், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் இலாபங்களுக்காக அரசியலமைப்பையும், மக்கள் ஆணையையும் அவமதிப்பதன் ஊடாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பது தவறான விடயம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.