2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரில் எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், போட்டி நடைபெறவுள்ள அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டு உளவுத்துறை தற்போதைய நிலைமையை கண்காணித்து வருவதாகவும், அதன்படி பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உட்பட எட்டு போட்டிகளை நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நியூயார்க் மாநில நிர்வாகம் உரிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நியூயார்க் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிள் பாதுகாப்பு எனது முன்னுரிமை வழங்கி உலகக் கிண்ணத் தொடர் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு, உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நியூயார்க் மாநில பொலிஸாருக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ISIS ஆதரவு அமைப்பான கொராசான் என்ற தீவிரவாதக் குழு ‘Lone Wolf’ தாக்குதல் நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள நியூயார்க் மைதானத்தின் பாதுகாப்பு உட்பட ஏனைய மைதானங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நியூயார்க் மாநில ஆளுநர் அலுவலகம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்பன தெரிவித்துள்ளன.
இந்திய அணி நியூயார்க்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உட்பட நான்கு போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் திகதி நியூயார்க்கை வந்தடைந்த இந்திய குழாம், தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.