சம்பள உயர்வு தொடர்பான சட்ட சமரிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
மலையக மக்களும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்று தேசிய நீரோட்டத்தில் சங்கமமாவதற்குரிய எமது அழுத்தங்களும், கோரிக்கைகளும் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கின்றது எனவும், அத்தீர்ப்பின் பிரகாரம் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த, தற்போதுகூட ஏற்றுமதி வருமானத்தின் பிரதான பங்காளிகளான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான சம்பளத்தைக்கூட ஒவ்வொருமுறையும் போராடியே பெற வேண்டியுள்ளது.
2020 இல் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெறக்கூட ஆயிரம் தடைகளை தாண்டிவேண்டி ஏற்பட்டது. இம்முறையும் அப்படிதான். ஆனால் நாம் தொழிலாளர்களுக்கு சார்பாக களமிறங்கினோம். தொடர் அழுத்தங்களை பிரயோகித்தோம். போராட்டங்களைக்கூட நடத்தியுள்ளோம்.
இனிவரும் காலப்பகுதியிலும் இப்படியான பாரபட்சங்கள் தொடரக்கூடாது, சம்பளப் பிரச்சினைக்கு நிலையானதொரு பொறிமுறை அவசியம், அதனை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுப்பார் என உறுதியாக நம்புகின்றோம்.
மலையக மக்களுள் ஒரு பகுதியினரே பெருந்தோட்டத் தொழிலாளர்கள், எனவே, ஒட்டுமொத்த மலையக மக்களின் வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்குரிய பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், அவை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அதற்குரிய வழிகாட்டல்களை நிச்சயம் நாம் வழங்குவோம்.
சம்பள உயர்வு போராட்டத்தில் வென்றதுபோல, உரிமைகளை வென்றெடுக்கும் சமரிலும் நிச்சயம் வெற்றிபெறுவோம்.” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.