இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த வீரர்களை உள்வாங்கும் நோக்கில், வீரர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சி நிலையங்களை உயர் செயல்திறன் மையத்தில் (High Performance Center) அமைக்கவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் வழிக்காட்டுதலுக்கு அமைய, ஆர்.பிரேமதாச மைதானத்தில் கடந்த வாரம் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் உள்ள 105 முதல் தர வீரர்கள் கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த வீரர்கள் பயிற்சியாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் உரிய குழாம்களுக்கு பிரிக்கப்பட்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்த தீவிர பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதனுடாக இலங்கை கிரிக்கெட் குழாமுக்கு தேவைப்படும் பந்துவீச்சாளர்களை உயர் செயல்திறன் மையத்தினுடாக உருவாக்குவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கான வேகப்பந்து வீச்சாளர்கள், உயர் செயல்திறன் மையத்தின் பயிற்சியாளர்கள், தேசிய அணியின் வேகப்பந்து பயிற்சிவிப்பாளர் அனுஷ சமரநாயக்க, ரவீந்தர புஷ்பகுமார, சமில கமகே மற்றும் தர்ஷன் கமகே ஆகியோரினாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பயிற்சிவிப்பாளர்களான பியால் விஜேதுங்க, சஜீவ வீரக்கோன் மற்றும் சச்சித் பத்திரன ஆகியோரினாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திறமையான வீரர்களை கண்டறியும் நோக்கில் எதிர்காலத்தில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களிலும் இத்தகைய வீரர் தெரிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.