LPL: தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர் அறிவிப்பு 

லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் தலைவருமான பங்களாதேஷை சேர்ந்த  தமீம் ரஹ்மான் போட்டி நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையினால் LPL நிர்வாகம் தம்புள்ளை அணியின் உரிமையை மீளப் பெற்றிருந்த நிலையில், தற்போது அணியின் உரிமை புதிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான தம்புள்ளை அணியின் உரிமத்தை கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட ஒரு முன்னணி பொறியியல் ஆலோசனை நிறுவனமான Sequoia Consultants பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட டிசில்வா ஹோல்டிங்ஸ் (DeSilva Holdings) நிறுவனத்தின் கீழ் தம்புள்ளை அணி செயற்படவுள்ளது. தம்புள்ளை அணியின் உரிமம் மாற்றப்பட்டமையினால், குறித்த அணி ‘தம்புள்ள சிக்ஸர்ஸ்’ (Dambulla Sixers) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

Sequoia Consultants நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் குறித்த நிறுவனத்தின் தலைவர், பொறியாளரான பிரியங்க டி சில்வாவுக்கு சொந்தமானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல் தர துடுப்பாட்ட வீரரான டி சில்வா, 1983ம் ஆண்டு இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ளதுடன், தற்போது அமெரிக்காவின் 60 வயதுக்கு மேற்பட்ட கிரிக்கெட் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். 

மேலும், அவர் இலாப நோக்கற்ற தெற்கு கலிபோர்னியாவின் இளைஞர் கிரிக்கெட் சங்கத்தின் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றுவதுடன், அமெரிக்கா மற்றும் இலங்கையில் பல வியாபாரங்களை முன்னெடுத்து வருகின்றார். கிரிக்கெட்டின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், இலங்கையில் கிரிக்கெட்டில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தினாலும் தம்புள்ளை அணியின் உரிமையை பெற்றுக் கொண்டதாக பிரியங்க டி சில்வா தெரிவித்துள்ளார். 

5 அணிகள் பங்குபற்றும் இந்த வருடத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் கண்டி, தம்புள்ளை மற்றும் கொழும்பு ஆகிய மைதானங்களில் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply