சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிடுவதன் ஊடாக கிரிக்கெட் வீரர்களை மாற்ற முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிடும் கீபோர்டு(keyboard) வீரர்களின் கருத்துக்களுக்கு அமைய விளையாட்டில் மாற்றங்களை மேற்கொண்டால், வாரந்தோறும் மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கிண்ணத்தில் கடந்த இரண்டு போட்டிகளின் தோல்வியின் அடிப்படையில் இலங்கை அணியின் வீரர்களை விமர்சிப்பது நியாயமற்றது எனவும் நேற்று(11.06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வெளியான வர்த்தமானி தொடர்பில் தவறான புரிதல் இருப்பதாகவும், குறித்த வர்த்தமானி கிரிக்கெட்டிற்கு மாத்திரமின்றி இலங்கையில் உள்ள 73 விளையாட்டுக்ளுக்குமானதுடன், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.