அதிரடி வெற்றியுடன் சூப்பர் 8க்குள் நுழைந்த மேற்கிந்திய தீவுகள்

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக  மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.  மேற்கிந்திய தீவுகள், டிரினிடாட்டில் இன்று(13.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷெர்பேன் ரதர்போர்ட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் போல்ட் 3 விக்கெட்டுக்களையும், டிம் சௌதி, லோகி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

150 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ் 40 ஓட்டங்களையும், மிட்செல் சான்டனர் ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுக்களையும், குடாகேஷ் மோடி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷெர்பேன் ரதர்போர்ட் தெரிவு செய்யப்பட்டார். 

போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, தொடரில் இதுவரை பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து ‘C’ குழாமின் தரவரிசையில் இறுதி இடத்திலுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது. 

‘C’ குழாமின் தரவரிசையில் சூப்பர் 8 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், உகாண்டா அணி 2 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் காணப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version