டி20 உலகக் கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், சென் வின்சன்டில் இன்று(13.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 64 ஓட்டங்களையும், டன்சித் ஹசன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஆர்யன், பால் வான் மீகெரென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. நெதர்லாந்து அணி சார்பில் சைபிரண்ட் ஏங்கல்பிரெக்ட் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் ரஹித் ஹோசைன் 3 விக்கெட்டுக்களையும், டஸ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளுடன் ‘D’ குழாமின் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறியது. இதன் காரணமாக ‘D’ குழாமிலுள்ள இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. இலங்கை அணி 3 போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகள் எதனையும் பெறாத நிலையில் தரவரிசையில் இறுதி இடத்திலுள்ளது.