சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த மே மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியான சமரி அத்தபத்து மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட சமரி அத்தபத்து, இரண்டாவது முறையாகவும் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவாகியுள்ளார். அவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் சிறந்த வீராங்கனையாக தெரிவாகியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி, பங்களாதேஷில் நடைபெறவுள்ள இந்த வருடத்திற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான தெரிவு காண் போட்டிகளிலும் வெற்றியீட்டியிருந்தது. குறித்த தொடரில் சமரி அத்தபத்து 151 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்ததுடன், 6 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார். தெரிவு காண் சுற்றின் இறுதிப் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 63 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான குடாகேஷ் மொடியும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த மே மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் குடாகேஷ் மொடி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.