இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை தொடர்ந்து இதே கதியில் பேண வேண்டும் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முன்னோக்கி செல்வதற்கு போதுமான முன்னேற்றம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான திட்டத்தின் பணிப்பாளர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்வரும் தேர்தல்களினால் நிலையற்ற தன்மை நிலவுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைபேற்றினை மீட்டெடுப்பதற்கும், நீண்ட கால பலன்களை பெற்றுக் கொள்வதற்கும் நுண் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.