உத்திக பிரேமரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி அம்பலம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உத்திக பிரேமரத்னவின் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது வாகனத்தின் மீது காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன தனது வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. 

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உதவியுடன் உத்திக பிரேமரத்ன இந்த துப்பாக்கிச் சூட்டினை திட்டமிட்டிருந்தமை விசாரணைகளினுடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை மற்றுமொரு நபரின் ஊடாக பொலிஸ் நிலையத்திற்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, உத்திக பிரேமரத்ன கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த அவர், தற்பொழுது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply