பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், இரசிகருடன் மோதலில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. காணொளி வைரலாக பரவிய சில மணித்தியாலங்களில் ஹரிஸ் ரவூப் இந்த விடயம் தொடர்பில் ‘X’ தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் பதிவில், தன்னுடைய குடும்பத்தை வார்த்தைகளினால் தாக்கியிருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என நான் தீர்மானித்திருந்தேன். ஆனால் இப்போது காணொளி வெளியானதால் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வது அவசியம் என நினைக்கின்றேன். பிரபலங்கள் என்ற வகையில், பொதுமக்களிடமிருந்து அனைத்து விதமான கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். எங்களை ஆதரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ பொதுமக்களுக்கு உரிமை காணப்படுகின்றது. இருப்பினும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வரும் போது அதற்கு பதிலளிக்க நான் தயங்க மாட்டேன். பிறரின் குடும்பங்கள் மற்றும் தொழிலைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மரியாதை செலுத்துவது முக்கியம்” என ஹரிஸ் ரவூப் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.