வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை முன்வைத்த எதிர்கட்சித் தலைவர்

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

ஆண்டுக்கு ஆண்டு, அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் அதிக பட்டதாரிகளை வெளியாக்கினாலும், அவர்கள் போட்டி மிக்க வேலைவாயப்புச் சந்தையில் உள்நுழைகிறார்களா என்பது இன்று ஓர் அடிப்படை பிரச்சினையாக மாறியுள்ளது. வேலைத் தேவைக்கு ஏற்ற கல்வித் தகுதி இன்மையும், அரச தொழிலே அவசியம் என்ற மனப்பான்மையும், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு இல்லாததுமே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனினும், இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தால், மதிப்புமிக்க இளம் மனித வளத்தை நாடு இழந்து வருகிறது. இது உண்மையில் மனித வளத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19.06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழ் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள மொத்த வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை, தற்போது அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் மற்றும் அதன் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு கொள்கைகளை கடிப்பிடிப்பதாலும், வெளிப்படைத்தன்மையின்மையாலும் பல பாரதூரமான பிரச்சினைகள் இன்று எழுந்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

பாடத்திட்டம் தொழில் சந்தைக்கு பொருந்த வேண்டும்.

அபிவிருத்தியடைந்த உலக நாடுகளின் பாடத்திட்டங்கள் சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைக்கேற்ப வகுக்கப்படுகின்றன. எமது நாட்டில் இது இவ்வாறு நடப்பதில்லை. பட்டதாரிகளை வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து மீட்க அவர்களை புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்குவது விரும்பத்தக்கது. இதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு மில்லியன் தொழில்முனைவோர்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் ஒரு மில்லியன் தொழில்முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்பட்டுத்துவோம். ஆரம்ப மூலதனம் மற்றும் செயற்பாட்டு மூலதனத்தை வழங்கி தொழில்முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மாணவர்களை பாதிக்கிறது.

அத்துடன், பல்கலைக்கழகங்களில் கல்வி சாரா தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிப் பரீட்சைகளையும் பாதிப்பதால் இதனை கையாள்வதற்கும், தீர்ப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

நமது நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில், இந்த ஆசிரியர் பற்றாக்குறையை போக்க கொரோனா காலத்தில் இருந்து 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக முக்கிய பணியை செய்து வருகின்றனர். இன்றைய நிலை குறித்து அவர்கள் முறையிடும் நிலையில், அவர்களுக்கும் நிலையான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு தாம் விஜயம் செய்த போது வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டினார. அவர்களின் கோரிக்கையும் தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்வதாகவே இருந்தது. மேலும், கற்பித்தல் துறையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தொழில் முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களினது கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து உரிய தீர்வுகளை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version