அரையிறுதியில் NCC, Moors, Burgher அணிகள்

இலங்கையின், 2024ம் ஆண்டிற்கான மேஜர் கிளப் டி20 தொடரின் காலிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. காலிறுதி சுற்றில் வெற்றியீட்டிய Nondescripts Cricket Club, Moors Sports Club மற்றும் Burgher Recreation Club அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

முதலாவது காலிறுதி போட்டியில் Colts Cricket Club மற்றும் Nondescripts Cricket Club ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய NCC அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய CCC அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. CCC அணி சார்பில் யாஷோத லங்க 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய NCC அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக DLS முறைப்படி NCC அணி 11 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. NCC அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.    

இரண்டாவது காலிறுதி போட்டியில் Bloomfield Cricket and Athletic Club மற்றும் Colombo Cricket Club அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறவிருந்தது. பெய்த தொடர் மழையின் காரணமாக, எந்தவொரு பந்தும் வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. 

மூன்றாவது காலிறுதிப் போட்டியில் Ace Capital Cricket Club மற்றும் Moors Sports Club அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய Moors அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Ace Capital அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. Moors அணி சார்பில் பந்து வீச்சில் தினுக டில்ஷான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Moors அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. Moors அணி சார்பில் அணித் தலைவர் ரமேஷ் மென்டிஸ், பசிந்து சூரியபண்டார ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

நான்காவது காலிறுதிப் போட்டியில் Burgher Recreation Club மற்றும் Tamil Union அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Tamil Union களத்தடுப்பை தெரிவு செய்தது. மழைக் காரணமாக போட்டி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய Burgher அணி 5 விக்கெட் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Tamil Union அணி 8 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. அதன்படி, இறுதி அரையிறுதிப் போட்டியில் Burgher அணி 2 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

காலிறுதிப் போட்டிகளின் நிறைவில் 2024ம் ஆண்டிற்கான மேஜர் கிளப் டி20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு NCC, Moors மற்றும் Burgher அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version