வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அபார வெற்றியீட்டியதன் ஊடாக தென்னாப்பிரிக்கா அணி உலக கிண்ணம் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. 

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மேற்கிந்திய தீவுகள், டிரினிடாடில் இன்று(27.06) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதுவே உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதி போட்டியில் அணியொன்று பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் எந்தவொரு வீரர்களும் 10 ஓட்டங்களை கடக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சார்பில் பந்துவீச்சில் மார்கோ ஜான்சன், ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ராபாடா, ஆன்ரிச் நொக்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

57 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டிணை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரிசா ஹென்றிக்ஸ் 29 ஓட்டங்களையும், எய்டன் மர்க்ரம் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் 9 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

இதுவரையில் உலக கிண்ணத் தொடரின் அரையிறுதி போட்டிகளில் 8 முறை பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி இதுவே அரையிறுதி போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதலாவது சந்தர்ப்பமாகும். 

இதேவேளை, எதிர்பாராத வகையில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணி, இம்முறை டி20 உலக கிண்ணத் தொடரில் பலம் மிக்க அணிகளுக்கும் பெரும் சவாலாக அமைந்திருந்ததுடன், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version