‘கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிய மாட்டேன்’ – மைத்திரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் இன்று (25/11) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தொடர்பாக, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டுக்கு இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜெயசேகர பதில் வழங்கும் போது அமைச்சர் மஹிந்தானந்த மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது பதவிக்காலத்தின்போது 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார். எனினும் இதனை மறுத்த தயாசிறி ஜெயசேகர, மஹிந்தானந்த அளுத்கமகேயின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மைத்திரிபால சிறிசேன காலத்தை விட தற்போதைய ஜனாதிபதியின் வரவு – செலவு திட்டத்தில் ஒரு பில்லியன் ரூபா மீதப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனவே தமது ஜனாதிபதியை பற்றி பேச தமக்கு உரிமையுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் சரத் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல மற்றும் முன்னாள் ஜனாதிபதி டி.பி விஜயதுங்க ஆகியோர் பயன்படுத்திய 3 வீடுகளை இணைத்து பெரிய வீடு ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன தற்போது வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய, பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிய தமக்கு விருப்பம் இல்லை என்றும் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

'கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிய மாட்டேன்' - மைத்திரி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version