ஆதிக்கத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா 

2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அபார வெற்றியீட்டியதன் ஊடாக இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மேற்கிந்திய தீவுகள், கயானாவில் நேற்று(27.06) நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாவே ஆரம்பிக்கப்பட்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7  விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 57 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

172 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஹரி புரூக் 25 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.  

இதன்படி, இந்தியா அரையிறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் அக்சர் படேல் தெரிவு செய்யப்பட்டார். 

இதுவரையில் தொடரின் எந்தவொரு போட்டிகளிலும் தோல்விகளை பெறாத இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை(29.06) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version