அதிகாரிகளினால் தருஷிக்கு இழைக்கப்பட்ட அநீதி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கையின் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்னவுக்கு, தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது வழங்கப்பட்ட தரமற்ற ஓடுபாதையின் காரணமாக 2024ம் ஆண்டிற்கான பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தியகமவில் நேற்று(28.06) நடைபெற்ற 102வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன பங்கேற்றிருந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில் நேற்றைய ஓட்டப்போட்டியில் பங்கேற்றிருந்த தருஷிக்கு, மழை நீர் நிரம்பிய ஓடு பாதையில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறித்த ஓட்டப் போட்டியைத் தாமதப்படுத்துமாறும், ஓடு பாதையில் உள்ள நீரை அகற்றுமாறும் தருஷி கருணாரத்னவின் பயிற்சிவிப்பாளர் இலங்கை தடகள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போது, அதிகாரிகளினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தை 02:03:00 நிமிடங்களில் நிறைவு செய்வதற்குப் பயிற்சி பெற்றிருந்த தருஷி, நேற்றைய ஓட்டப் போட்டியை 02:04:22 நிமிடங்களில் நிறைவு செய்திருந்தார்.

இதன் காரணமாக, உலக தரவரிசையில் 39 இடத்திற்கு முன்னேறியிருக்க வேண்டிய தடகள வீராங்கனை, தரவரிசையில் 42வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பயிற்சிவிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான காலம் எல்லை நாளைய தினம்(30.06) நிறைவடையவுள்ளமையினால், தரவரிசையில் பின் தள்ளப்பட்டுள்ள தருஷி ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

தியகமவில் நேற்று(28.06) நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தகுந்த ஓடுபாதை வழங்கப்பட்டிருந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டிருக்கும் என தருஷி கருணாரத்னவின் பயிற்சிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply