LPL – இறுதிப் பந்தவரை சென்ற விறு விறுப்பான போட்டி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளின் முதற் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் காலி அணி 05 விக்கெட்களினால் வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ள்ளது.

ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்திய காலி அணிக்கு அதன் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல 47(27) ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுத்தார். தனஞ்சய டி சில்வா அவரை ஆட்டமிழக்க செய்தார். அதன் பின்னர் காலி அணியின் ஓட்ட வேகம் குறைவடைந்தது. அவரோடு களமிறங்கிய அலெக்ஸ் ஹெல்ஸ் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். மூன்றாமிலக்கத்தில் களமிறங்கிய ரிம் செய்பேர்ட், பேர்பியன் அலனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வேகத்தை அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகரித்த வேளையில் பேர்பியன் அலனின் பந்துவீச்சில் 65(47) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அலன் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட காலி அணி வெற்றியிலக்கை நோக்கி நகர்வது இறுக்கமானது. 18 ஆவது ஓவரை 6 ஓட்டத்துடன் ஆரம்பித்த பானுக ராஜபக்ஷ, அசித்த பெர்னாண்டோவின் அடுத்த பந்தில் 13(13) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக யாழ் அணிக்கு வெற்றி ஓரளவு உறுதியானது. ஆனாலும் ஜனித் லியனகே தனது அணியின் வெற்றிக்காக போராடினார். பானுக ஆட்டமிழந்த அதே ஓவரில் ஜனித் லியனகே 12 ஓட்டங்களை பெற்று வாய்ப்பை தனது அணிக்கு உருவாக்கினார். வெற்றி பெற 5 ஓட்டங்கள் என்ற நிலையில் ஜனித் லியனகே அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் 25(13) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் டுவைன் பிரட்டோரியஸ் கைகொடுக்க இறுதிப் பந்தில் ஷகான் ஆராச்சிகே 4 ஓட்டத்தை பெற காலி அணியின் வெற்றி உறுதியானது.

கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

தனஞ்சய இறுக்கமாக பந்துவீசி 04 ஓவர்களில் 16 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் வியாஸ்காந்த் இன்று பிரகாசிக்க தவறினார். 2 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களை வழங்கியிருந்தார். அசித்த பெர்னாண்டோ 04 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார். 04 ஓவர்கள் பந்துவீசிய ஜேசன் பெஹ்ரான்டஒப் விக்கெட்டின்றி 37 ஓட்டங்களை வழங்கினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குஷல் மென்டிஸ் 4 ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு நல்ல அடித்தளத்தை வழங்கினார். நிஸ்ஸங்க 51(33) ஓட்டங்களை பெற்ற வேளையில் டுவைன் பிரட்டோரியஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிலி ரொசோவ் 01 ஓட்டத்துடன் 07 பந்துகளில் ஆட்டமிழந்தார். யாழ் அணிக்கு இது பின்னடைவு ஏற்படுத்தியது.

அவிஷ்க பெர்னாண்டோ நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பாடி யாழ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திக் கொடுத்தார். 59(48) ஓட்டங்களைப் பெற்ற வேளையில் டுவைன் பிரட்டோரியஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியின் தலைவர் சரித் அசலங்க 33(15) ஓட்டங்களுடன் ஷகூர் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனஞ்சய டி சில்வா 18(08) ஓட்டங்களுடன் இசுரு உதானவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்ளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

காலி அணியின் பந்துவீச்சில் ஷகூர் கான் 04 ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். இசுரு உதான 60 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். டுவைன் பிரட்டோரியஸ் 04 ஓவர்களில் 23 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

அணி விபரம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், தனஞ்சய டி சில்வா, ப்ரமோட் மதுஷான், ஜேசன் பெஹ்ராண்டோப், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க

Social Share

Leave a Reply