2024 ஒலிம்பிக் போட்டிக்கு தருஷி, தில்ஹானி ஆகியோர் தகுதி 

இலங்கையின் தருஷி கருணாரத்னே மற்றும் நதீஷா தில்ஹானி லேகம்கே ஆகியோர் 2024ம் ஆண்டிற்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெளியான புதிய தரவரிசையின் அடிப்படையில் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்னவும், மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா தில்ஹானி லேகம்கேவும் பங்கேற்கவுள்ளனர். 

மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனை படைத்துள்ள தருஷி கருணாரத்ன, பாங்கொக்கில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதுடன், 25 வருட பழமையான ஆசிய சாதனையை முறியடித்திருந்தார். 

தருஷி கருணாரத்ன தனது 19 வயதில், 2022ம் ஆண்டிற்கான ஆசிய போட்டிகளில் மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். 

இருப்பினும், தியகமவில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்ற 102வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் மழை நீர் நிரம்பிய தரமற்ற ஓடுபாதையில் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தருஷி, குறிப்பிட்ட நேரத்தில் ஓட்டத்தை நிறைவு செய்யாமையினால் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது கேள்விகுறியாகியிருந்தது. 

இந்நிலையில் வெளியாகியுள்ள புதிய தரவரிசையின் அடிப்படையில் தருஷி கருணாரத்ன ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை, மகளிருக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாதனை படைத்துள்ள நதீஷா தில்ஹானி லேகம்கேவும் இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  

இவர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதுடன், 2023ம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றியிருந்தார். 

Social Share

Leave a Reply