புலம்பெயர் தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகளின் மோசடி அம்பலம் 

சில புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் இந்தியா, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பாரிய மோசடியில் ஈடுபட்டு வருவதை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய குடும்ப உறுப்பினரொருவர் அம்பலப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

முன்னாள் கிளர்ச்சித் தலைவரை உயிருடன் வைத்திருக்கும் நோக்கில் சேகரிக்கப்படும் பணம், வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தினருக்கோ அல்லது வடக்கிலுள்ள துன்பப்படும் தமிழர்களுக்கோ சென்றடைவதில்லை என பிரபாகரனின் மூத்த சகோதரனின் மகன் கார்த்திக் மனோகரன் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலினுடாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியத் தமிழ் அரசியல் தலைவர்களான நெடுமாறன், காசி ஆனந்தன் மற்றும் இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர்  அரசியல் மற்றும் நிதி ஆதாயங்களை பெற்றுக்கொள்வதற்காக, தனது சித்தப்பா வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சகோதரிக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு முயற்சிப்பதாக கார்த்திக் மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளார். 

இறந்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இத்தகைய நபர்களின் மோசடிக்கு இலக்காக வேண்டாமென உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கார்த்திக் மனோகரன், சில தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து சில புலம்பெயர் தமிழ் குழுக்கள் பணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது அந்த பணத்தை கொண்டு உயிரிழந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை பராமரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  

கடந்த 26ம் வருடங்களாக டென்மார்க்கை இருப்பிடமாக கொண்டுள்ள கார்த்திக் மனோகரன், வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது உயிரிழந்ததாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply