ஒலிம்பிக்கிற்கு 5 இலங்கை வீரர்கள் தகுதி, மூவர் காத்திருப்பு பட்டியலில்  

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே உட்பட ஐந்து இலங்கை வீரர்கள் 2024ம் ஆண்டிற்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தும் வீரர்கள் பூப்பந்தாட்டம், நீச்சல் போட்டி மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். 

குறைந்த வயதில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையர் என்ற பெருமையை பெற்று, நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரேன் நெட்டசிங்க ஆடவருக்கான பூப்பந்தாட்ட போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார். 

ஆசிய சாதனையாளர் தருஷி கருணாரத்ன, மகளிருக்ககான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு நேற்றைய(02.07) தினம் தகுதிப் பெற்றுக் கொண்டார். 

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்களில் தரவரிசையில் முன்னிலையிலுள்ள தில்ஹானி லேகம்கே மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார். 

நீச்சல் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவில் கைல் அபேசிங்கவும், மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவில் கங்கா செனவிரத்னவும் பங்கேற்கவுள்ளனர். 

இதேவேளை, மேலும் மூன்று இலங்கை வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. 

தரவரிசையில் 51வது இடத்திலுள்ள அருண தர்ஷன ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்திற்கு தெரிவாகியுள்ள 3 வீரர்கள் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில், அருண தர்ஷன பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக் கொள்வார். 

கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், தெற்காசியாவின் அதிவேக மனிதனான யுபுன் அபேகோன், ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளவர்களில் ஒருவர் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் அந்த வாய்ப்பை பெற்றுக் கொள்வார். 

ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா, அவரின் சமீபத்திய வெற்றிகளின் அடிப்படையில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ், பாரிஸில் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 

Social Share

Leave a Reply