புதிய அரசியல்,பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று (05.07) காலிமுகத்திடல் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வங்கியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சவாலை அச்சமின்றி மக்களுக்கு எடுத்துக்கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்குத் தகுந்த வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அதற்கு மாறான வேலைத்திட்டங்கள் எவையும் நாட்டுக்கு கிடையாதெனவும், கனவுலகில் இருப்பதை விடுத்து நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அடையாளம் கண்டு செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதெனவும் வலியுறுத்தினார்.


சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானை முன்மாதிரியாகக் கூறினாலும், அவர் தோல்வியடைந்தவர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிலர் உலகத் தலைவர்களிடம் பணம் கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள தேசம் ஒருபோதும் யாசகம் கேட்டுச் செல்லாதெனவும், தன்னம்பிக்கையால் முன்னேறக்கூடிய தேசமாகவே திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.


ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த ஜனாதிபதி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதில் வங்கிக் கட்டமைப்புக்கு முக்கிய வகிபாகம் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இதன்போது தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் இடையேயான கலந்துரையாடல் அமர்வொன்றும் இடம்பெற்றது.


மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி
“இன்று நாம் பொருளாதாரத்தில் வெகுதூரம் வந்துவிட்டோம். அன்று ஜெட்விங் ஹோட்டலில் இருந்து இந்த காலிமுகத்திடல் ஹோட்டல்வரை என்ன நடந்தது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அந்தப் பயணத்தில் எனது வீடும் எரிந்து நாசமானது. இன்று ஓரளவு முன்னேற்றத்தை எட்டியுள்ளோம்.

ஆனால் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாக்காவிட்டால், பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாது என்பதை நான் அப்போதே தெளிவாகக் கூறியிருந்தேன். வங்கிக் கட்டமைப்பு சீர்குலைந்தால், பொருளாதாரமும் நிலைகுலைந்துவிடும்.


அன்று நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பணியை ஆரம்பித்தோம். இன்று அதன் பெறுபேறுகள் கிடைக்கின்றன. அனைத்துப் பலன்களும் ஒரே தடவையில் கிட்டிவிடாது.

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த 4 வருடகால அவகாசம் கிடைத்துள்ளதோடு, மீள் செலுத்துகை தொகையிலிருந்து 8 பில்லியன் டொலர் கடன் தொகையை தள்ளுபடி செய்யவும் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது நாம் ஒரு நாடாக ஒரு மைல்கல் இலக்கை அடைந்துள்ளோம். எமக்கு 8 பில்லியன் டொலர் கடன் நிவாரணம் கிடைத்துள்ளதால், புதிய பொருளாதாரத்திற்கு செல்வதற்கான சுதந்திரமான சூழல் உருவாகியுள்ளது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம்.

நாம் இங்கிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்குள் வங்கிக் கட்டமைப்பின் வகிபாகம் முக்கியமானது. இதற்கான பணத்தை எவ்வாறு தேடப் போகிறோம்? வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வங்கிகள் செழிப்படையும். இந்த இலக்கை நாம் இன்னும் அடையவில்லை.

சரிவடைந்த பொருளாதாரத்தை நாம் சரிசெய்து முன்னோக்கிச் சென்றாலும், சீர்குலைந்த அரசியல் கட்டமைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. அன்று சில தலைவர்கள பயந்தோடினர். அதனால் இந்த நாட்டில் அரசியல் தலைமைத்துவம் எவ்வாறானது என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய தலைவர்களால் நாட்டை முன்னேற்ற முடியுமா? நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லாததன் காரணமாகவே அன்று அவர்கள் பயந்தோடினர்.

முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் நாட்டின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஆட்டம் கண்டது. சிலர் என்னை பிரதமர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். அவ்வாறான அரசியல் முறையுடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. நாட்டின் பொருளாதார மாற்ற சட்டமூலத்தை நாம் சமர்பித்த வேளையில் அதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வழக்குத் தாக்கல் செய்தார்.

“இறக்குமதி அடிப்படையிலான பொருளாதாரம் தேவை” என்று அவரின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்றும் இறக்குமதிப் பொருளாதாரத்தை மையமாக கொண்டு செயற்படுவதாலேயே பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்.

இன்னும் சிலர் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மானைப் பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். அதேபோல் மற்றும் சிலர், உலகம் முழுவதும் சென்று தலைவர்களிடம் பணம் கேட்கச் செல்கிறார்கள். நான் யாசகன் அல்ல. சிங்கள தேசம் பிச்சைக்கார தேசமும் அல்ல. மேலும் சிலர் இறக்குமதி சார்ந்த பொருளாதாரம் தொடர்பில் பல விடயங்களை கூறுகிறார்கள்.

“சர்வதேச நாணய நிதியம் வேண்டாம் என்று கூறியபோதும் பொருளாதார நெருக்கடி இருப்பதை கருத்தில் கொள்ளாமல் எதற்காக வரிகளை குறைத்தீர்கள்” என ஒருநாள் நான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டேன், தொழில் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையின் காரணமாகவே அதனைச் செய்ததாகக் கூறினார். அவர் சொன்னதுதான் உண்மை. அதனை நானும் அறிவேன். நீங்கள் ஏன் வரியைக் குறைக்கவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்களை இன்று தேடிக்கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நாட்டுக்குத் தேவையான வேலைத்திட்டத்தை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும். கனவுலகில் இருப்பது நல்லதல்ல. உண்மையை அறிந்து செயல்பட வேண்டும். இன்றைய நடவடிக்கைகளே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும். நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம். புதிய அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு உண்மை நிலவரத்தை அச்சமின்றி பேசக்கூடியவர்களையும் உருவாக்க வேண்டும். இல்வாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இருக்காது.

நாம் எப்போதும் உண்மையைச் சொல்வோம். அரசியலில் உண்மையைச் சொல்ல அச்சப்பட வேண்டாம். அனைத்து கட்சியினரையும் ஒன்றிணைத்துதான் இந்த அரசாங்கத்தை நடத்தினேன். சில கட்சிகளில் ஒழுக்கம் இல்லாவிட்டாலும் அரசாங்கத்துக்குள் ஒழுக்கம் உள்ளது.


அதனால் அச்சமின்றி எம்மோடு இணைந்துகொள்ளுங்கள். பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் எம்முடன் இணைந்துள்ளனர். இன்று நாம் பொருளாதாரத்தை தயார் செய்துள்ள நிலைக்கு அரசியல் முறைமை வரவில்லை. அது பற்றிய சிந்தனையுடன் பணியாற்ற வேண்டும்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version