சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் நேற்று(07.07) இரவு ஆரம்பித்த கண்டன போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுமக்கள் இவ்வாறு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர் பகுதியிலுள்ள கடைகள், பொதுச்சந்தை என்பன மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக 4 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், வைத்தியர்கள் இன்று(08.07) தமது கடமைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரனவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொதுமக்கள் தன்னை வெளியேறுமாறு தெரிவிக்கும் பட்சத்தில் மாத்திரமே தான் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவன் என தெரிவித்து, வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருக்கின்றார்.