LPL: இறுதி லீக் போட்டியில் கண்டிக்கு வெற்றி 

லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ள சிக்சேர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கண்டி பல்கொன்ஸ் அணி வெற்றியீட்டியது. 223 எனும் இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 54 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்ததன் காரணமாக, கண்டி அணிக்கு அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

கொழும்பில் இன்று(15.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்  டினேஷ் சந்திமால் 12(14) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்தில் இணைந்த மொஹமட் ஹரிஸ், அன்றே ப்லட்சர் ஜோடி வேகமாக 42 ஓட்டங்களை குவித்தது. மொஹமட் ஹரிஸ் 24(13) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த அணித் தலைவர் வனிந்து ஹசரங்க வேகமாக 25(12) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்றே ப்லட்சர் 60(24) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் ஆட்டமிழக்கமால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 222 வரை உயர்த்தினர். கமிந்து மென்டிஸ் 51(24) ஒட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 44(23) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

தம்புள்ளை அணி சார்பில், துஷான் ஹேமந்த 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சொனால் டினுஷ 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

223 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரீஷா ஹென்றிக்ஸ் உட்பட, இப்ராஹிம் ஷர்டான், லஹிரு உதார ஆகியோர் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழக்க, மறுபுறம் குஷல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். 

தம்புள்ளை அணியின் மார்க் சப்மன் 24(19) ஓட்டங்களுக்கும், அணித் தலைவர் மொஹமட் நபி 3(7) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 15வது ஓவரில்  குஷல் ஜனித் பெரேரா 74(40) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தம்புள்ளை அணியின் வெற்றி வாய்ப்புகள் குறைந்தன. அதன்பின்னர் களத்திற்கு வந்த வீரர்களும் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

கண்டி அணி சாரப்பில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தஸூன் சாணக்க 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, கண்டி அணி லீக் போட்டிகளில் தனது இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியதுடன், தர வரிசையில் தம்புள்ளை அணியை பின்தள்ளி 4ம் இடத்திற்கு முன்னேறியது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கண்டி அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார். 

கண்டி அணியின் அனைத்து லீக் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் 6 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், தம்புள்ளை அணிக்கு ஒரு லீக் போட்டி மீதமிருக்க 4 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளது. 

Social Share

Leave a Reply