சம்பிரதாய அரசியலிலிருந்து விலக வேண்டும் – ஜனாதிபதி

சம்பிரதாய அரசியலிலிருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி

“கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டது. நாட்டைப் பற்றி சிந்தித்து ஒரு குழு உருவானது. அவர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி செயல்பட்டனர். எனவே, எந்தக் கட்சியையும் சாராதவர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இடத்தில் உள்ளனர். 2022 மே 09 ஆம் திகதி நடந்த சம்பவத்தைப் பற்றி நான் மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை. நாட்டு மக்கள் ஒடுக்கப்பட்டதால், போராட்டங்கள் வெடித்தன. இந்த பிரச்சாரங்களை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இறுதியில் சம்பிரதாய கட்சிகளால் நாட்டின் தலைமைத்துவத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

2021 டிசம்பர் 2021 இல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாட்டில் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். இதனை நான் அப்போதைய ஜனாதிபதிக்கு அறிவித்தேன். உலக வங்கிப் பிரதிநிதிகள் இங்கு வந்தபோதும் இதுபற்றி ஆராய்த்தோம். இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தன.

இந்தக் கூட்டத்திற்கு தமிழ் கூட்டணியின் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே வருகை தந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான் மாத்திரமே பங்கேற்றேன். மற்ற எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. அது தவறான செயல் என்றே சொல்ல வேண்டும்.

அந்த சமயத்தில் நாட்டில் பாரிய நெருக்கடி நிலை இருந்தது. அதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்வது நம் அனைவரின் பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்பை யாராலும் தவிர்க்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் மாற்றுப் பிரதமர். அவர் பஸ் டிரைவர் அல்ல. எனவே, இதில் பங்கேற்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அன்றிருந்த நெருக்கடி தொடர்பில் செயற்பட முன்வரவில்லை.

அதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 9ஆம் திகதி பதவி விலகினார். அப்போது ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் நிலையில் மொட்டுக் கட்சி இருக்கவில்லை. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். நாங்கள் பிரிட்டிஷ் முறையைப் பற்றி பேசுவதால், மாற்று பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தால், சம்பிரதாயப் படி எதிர்க்கட்சித் தலைவருக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர். அது தொடர்பில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. யாராக இருந்தாலும் உதவத் தயார் என நான் அன்று கூறினேன். ஆனால், மே 10 ஆம் திகதி பொறுப்பேற்க வருமாறு அறிவிக்கப்பட்டும் அவர் வரவில்லை. பிரதமர் பதவியை ஏற்பதில்லை என முடிவு செய்திருந்தனர். அவர் தனது கடமையை நிறைவேற்றவில்லை. குறுகிய அரசியல் நோக்கில் செயற்பட முயன்றதால் அவரால் முன்நோக்கி வர முடியவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியை உறுதிப்படுத்தி நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முன்னோக்கி செல்வோம். நாம் எப்போதும் பிச்சைக்கார நாடாக இருக்க முடியாது. பொருளாதார ரீதியில் கீழ் நோக்கிச் செல்ல முடியாது. வலுவான பொருளாதாரத்துடன் நாட்டை முன்னேற்ற வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுமாறு அழைக்கிறோம். இன்று உங்களின் வருகைக்கு நாம் நன்றி கூறுகிறோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Social Share

Leave a Reply