தாரா தேவியின் சிலை உட்பட காலனித்துவ காலத்தில் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்களை மீண்டும் இந்நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்
இன்று நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். ஆனால் அதற்கு மேலதிகமாக இலங்கை மக்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பொறுப்பு எமது அமைச்சின் மீது உள்ளது. எமது அமைச்சுக்கு சிறந்த சமூகத்தினை உருவாக்குவதற்கான உத்தியோகபூர்வ வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதைக் கூற வேண்டும்.
மேலும், நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் தேவையான கல்வி முறை நம் நாட்டில் உருவாக்கப்படவில்லை. இந்த முரண்பாட்டினால் சமூகம் தற்போது துரதிஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மீது அன்பும், பெருமையும் இல்லாத ஒரு கூட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் நாடு அடிமை பூமியாக மாறலாம். எனவே அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற எமது அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி நிறுவனங்களில் பல வருடங்களாக கடமையாற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று நியமனம் வழங்கப்பட்டது. பல வருட கால தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இது தேர்தலை இலக்காகக் கொண்ட செயல் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக பத்துக்கும் மேற்பட்ட அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதாவது ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நம் நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு பல தொல்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றில் தாரா தேவி சிலையும் உள்ளது. அதன்படி, அந்த சிலை உட்பட பல புராதன பொக்கிஷங்களை இந்த நாட்டுக்கு கொண்டு வர தேவையான பணிகளை செய்து வருகிறோம். நெதர்லாந்திலிருந்தும் இதே போன்ற பல தொல்பொருட்கள் மீண்டும் எமக்குக் கிடைத்துள்ளன.
மேலும், நம் நாட்டில் சிலர் தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், சரியானதைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் பார்ப்பவர்கள்தான் நமக்குத் தேவை. அதற்கேற்ப நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றத்திற்காக செயற்படும் மக்களே எமக்கு அவசியம் என்பது தற்போது உணரப்பட்டுள்ளது” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.