யாழில் ஆடிப்பிறப்பு விழா..! 

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச் செயலாளரும், மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத் தலைவருமான செல்வி உ.தர்ஷினியின் தலைமையில் இன்று(17.07) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், நலன்புரிக் கழக போசகருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார்.

மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் மாவட்ட செயலக நலன்புரி கழக  உப செயலாளர் வை.பகீரதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில், ஆடிப் பிறப்பின் சிறப்பினை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தமது பாடலின் ஊடாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டின்  பெருமையினை  எடுத்துக்காட்டியுள்ளார் எனவும், எமது அடுத்த சந்ததியினருக்கு தமிழர் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் அதற்கு அச்சாணியாக ஆடிப்பிறப்பு விழாவும் அமைகின்றது எனவும் தெரிவித்து, பல கருத்துக்களை முன்வைத்தார்.

மேலும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் செந்தழிழ் சொல்லருவி ச.லலீசன் சிறப்புரையாற்றுகையில், எமது முன்னோர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அதாவது தைப் பொங்கல், வருடப் பிறப்பு, ஆடிப் பிறப்பு மற்றும் தீபாவளி என கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடுவதன் ஊடாக மக்களிடையே புத்துணர்ச்சி ஏற்படுத்த வழிவகுத்தார்கள் எனவும், இதன் பெருமைகளை எமது சமூகம் உணராத சமூகமாக இருந்தவருவதாகவும் தெரிவித்து, ஆடிப்பிறப்பின் மகத்துவம் தொடர்பாக சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் க.லதாவினால் ஆடிப்பிறப்பு பாடல் இசைக்கப்பட்டது. நலன்புரி கழக செயலாளர் ந. ரதிகுமாரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து ஆடிக்கூழ் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version