மகளிர் ஆசியக் கிண்ண வரலாற்றில் நேபாளம் அணி முதல் வெற்றியை இன்று(19.07) பதிவு செய்தது. ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணிக்கு எதிரான மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் நேபாளம் அணி இலகுவாக வெற்றியீட்டியது.
தம்புள்ளையில் இன்று(19.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பில் குஷி சர்மா(Khushi Sharma) 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். நேபாளம் அணி சார்பில் பந்துவீச்சில் அணித் தலைவி இந்து பர்மா(Indu Barma) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
116 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நேபாளம் அணி 16.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. நேபாளம் அணி சார்பில் சம்ஜானா கட்கா(Samjhana Khadka) ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பில் பந்துவீச்சில் கவிஷா(Kavisha) 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இந்த போட்டியில் குழு ‘ஏ’ உள்ள நேபாளம் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகியாக சம்ஜானா கட்கா(Samjhana Khadka) தெரிவு செய்யப்பட்டார்.