ஆசிய கிண்ணம் – பாகிஸ்தான் அணிக்கு இலகு வெற்றி

தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தமது முதல் சுற்றுப் போட்டிகளை நிறைவு செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரக அணி சகல போட்டிகளிலும் தோல்வியடைந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் இந்தியா-நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. இதில் தீர்த்தா சதீஸ் 40 ஓட்டங்களையும், ஈஷா ஒஷா 16 ஓட்டங்களையும் பெற்றனர். சாதியா இக்பால், நஸ்ரா சந்து, டுபா ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை பாகிஸ்தான் அணி சார்பில் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 107 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் குல் பெரோஷா 62 ஓட்டங்களையும் முனீபா அலி 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி இரண்டாமிடத்தில் காணப்படுவதனாலும், நேபாளம் அணி இந்தியா அணியை மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற நிலையிலும் பாகிஸ்தான் அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் நிலை மிக அதிகம்.

Social Share

Leave a Reply