இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ள குமார் சங்கக்கார? 

இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்படும் மேத்யூ மோட் அடுத்த வாரம் பதவி விலகவுள்ள நிலையில், குறித்த பதவிக்கும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

கடந்த வருடம் நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதுடன், டி20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை சென்றிருந்த நிலையில், இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைவராக ஜோஸ் பட்லர் தொடர்ந்து செயற்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஜோஸ் பட்லர் தலைவராக செயற்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, 2021ம் ஆண்டு முதல் குமார் சங்கக்கார கிரிக்கெட் இயக்குநராக கடமையாற்றி வருகின்றார். ஐபிஎல் தொடரில் ஒன்றினைந்த பணியாற்றிய சங்கக்கார – பட்லர் ஜோடி சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மைக்கேல் ஹசி மற்றும் ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்சிவிப்பாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான ஜொனாதன் டிராட் ஆகியோரும் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்றுவிப்பாளராக செயற்படும் இங்கிலாந்து டெஸ்ட் அணி சிறந்த முறையில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து  ஒரு நாள் மற்றும் டி20 அணிகள் மீளவும் வலுப்பெறும் வகையில் புதிய பயிற்றுவிப்பாளருக்கான தேடல் இடம்பெற்று வருகின்றது. அதில் குமார் சங்கக்கார முன்னிலையில் உள்ளார். 

Social Share

Leave a Reply