இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிவரை இலங்கை அணிக்கு சாதகமாக காணப்பட்ட போட்டி, இலங்கை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக சமநிலையில் நிறைவடைந்த நிலையில், இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றியீட்டியது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(30.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்தியா அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சுப்மன் கில் நிதானமாக துடுப்பெடுத்தாடி 39(37) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்தியா அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரியான் பராக் 26(18) ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்த்தார். இறுதி ஓவர்களில் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் 25(17) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், சமிந்து விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர். தனது முதலாவது சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்ற சமிந்து விக்ரமசிங்க இந்த போட்டியில் கன்னி விக்கெட்டினை பதிவு செய்தார்.
இதற்கமைய இலங்கை அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு பத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மென்டிஸ் இருவரும் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். பத்தும் நிஸ்ஸங்க 26(27) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க களத்திற்கு வந்த குஷல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.
குசல் மென்டிஸ் 43(41) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததன் பின்னர் களத்திற்கு வந்த வனிந்து ஹசரங்க 3(4) ஓட்டங்களுக்கும், அணித் தலைவர் சரித் அசலன்க ஓட்டங்களைப் பெறமாலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்திலிருந்த குஷல் ஜனித் பெரேரா இலங்கையின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது ஆட்டமிழந்தார். குஷல் ஜனித் பெரேரா 46(34) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இறுதி 2 ஓவர்களில் இந்தியா சார்பில் துடுப்பாட்ட வீரர்களான ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் பந்துவீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில் இலங்கை அணியின் கைகளிலிருந்த போட்டி இந்தியாவிற்கு சாதகமாக மாறியது. போட்டியின் இறுதிப் பந்தில் இலங்கை அணிக்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சமிந்து விக்கிரமசிங்க 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள இரு அணிகளின் ஓட்ட எண்ணிக்கையும் சமநிலையானது.
இந்தியா சார்பில் பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. குஷல் ஜனித் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க இருவரும் ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
3 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சூப்பர் ஓவரில் களமிறங்கிய இந்தியா அணி முதலாவது பந்திலிலேயே 4 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய இந்தியா 3-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றிக்கொண்டது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இந்தியாவின் வாஷிங்டன் சுந்தரும் தொடரின் ஆட்ட நாயகனாக அணித் தலைவர் சூர்யகுமார் யாதவும் தெரிவு செய்யப்பட்டனர்.