மன்னாரில் பயண வரலாற்று அருங்காட்சியகம்

வரலாற்று நிகழ்வுகளை இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘எமது காலம்’ எனும் கருப்பொருளில் ‘பயண வரலாற்று’ அருங்காட்சியகம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான செயற்திட்ட நடவடிக்கை கூட்டம் நேற்று(30/07)காலை 10 மணியளவில் மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் பழைய மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் SCOPE அமைப்பின் திட்ட ஆலோசகர் சுஜான் நாணயக்கார , தேசிய பணிப்பாளர் நவாஸ் முகமட்,குறித்த அமைப்பின் வரலாற்று கருத்தாடல் ஆலோசகர் தர்ஷிகா கதிர்வேல்,திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமட் சுஹைல், திட்ட ஒருங்கிணைப்பாளர் தரிந்த மல்லவராச்சி,திட்ட முகாமையாளர் சௌமியா அமரசிங்க மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பயண வரலாற்று அருங்காட்சியகம் மன்னார் நகரில் 8 நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வுள்ளது.

இதற்கான ஏற்பாடு ,மற்றும் மன்னார் மாவட்டம் தொடர்பான வரலாறு, மற்றும்  மன்னார் மாவட்ட எல்லைகள், மன்னார் மாவட்டத்தின் சிறப்பு, சமயம், கலாச்சாரம்,பண்பாடுகள்,கலை, இன்னும் பல்வேறு வரலாற்று சிறப்புகள் தொடர்பான ஆய்வுகள் தரவுகள் மற்றும் பல்வேறு தரப்பினர் களையும் அறிந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் வரலாற்று ரீதியான பதிவுகள் அறியப்படாத நிலையில் குறித்த நிகழ்வினூடாக மக்கள் பயன் பெறும் விதத்தில் குறிப்பாக மாணவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் பயண அருங்காட்சியகம் முன்னெடுக்கும் படி மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறிப்பாக வளவாளர்கள் தமிழில் தமது கருத்துக்களை ஆவணப்படுத்தல்களை முன் வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் பயண அருங்காட்சியகத்திட்டத்தினூடாகப் பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply