ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள போதிலும், கட்சி எடுத்த தீர்மானத்துடன் தொடர்ந்து உடன் நிற்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு இணங்க தவறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என நாமல் ராஜபக்ஷவிடம் வினவப்பட்ட போது, குறித்த நபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் தீர்மானிப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நபர்கள், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதனை விமர்சித்தவர்கள் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானிப்பது சாதாரண விடயம் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.