ஒலிம்பிக்: பாலின சோதனையில் தோல்வியடைந்த வீராங்கனைக்கு மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதி சோதனையில் தோல்வியடைந்த அல்ஜீரியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை இமானே கேலிஃப்(Imane Khelif) பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது முதல் வெற்றியை நேற்று(01.08) பதிவு செய்தார். இத்தாலி வீராங்கனை ஏஞ்செலா கரீனிக்கு(Angela Carini) எதிராக அல்ஜீரிய வீராங்கனை இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்.

மகளிர் 66 கிலோ எடைப் பிரிவிற்கான இந்த போட்டி ஆரம்பமாகி 46 வினாடிகளில் ஏஞ்செலா கரீனி போட்டியை இடை நிறுத்திக்கொண்டார். போட்டியின் வெற்றியாளராக அல்ஜீரியாவின் இமானே கேலிஃப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கை கொடுப்பதற்கும் ஏஞ்செலா கரீனி மறுப்புத் தெரிவித்தார். பின்னர் போட்டி நடைபெற்ற களத்தில் நின்றபடியே அவர் கண்ணீர் விட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி ஆரம்பமாகியவுடன் இமானே கேலிஃப், ஏஞ்செலா கரீனியை இரு முறை முகத்தில் குத்தியவுடன் நிலைகுலைந்த ஏஞ்செலா கரீனி போட்டியை இடை நிறுத்தினார். இதனால் அல்ஜீரிய வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இமானே கேலிஃபிற்கு பிறப்பிலேயே ஆண்களுக்குக் காணப்படும் தெஸ்தெஸ்தரோன் ஹார்மோன் அளவு அதிகம் என்பதால் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாற்றுப் பாலினத்தவராகக் கருதப்படும் இமானே கேலிஃப்பின் குத்துக்கள் இதுவரை உணர்ந்திராத அளவுக்குக் கடுமையாக இருந்ததாகப் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இத்தாலியின் ஏஞ்செலா கரீனி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதி சோதனையில் தோல்வி அடைந்ததால் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இமானே கேலிஃப் ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஒலிம்பிக் குத்துச்சண்டை வேறுபட்ட நிர்வாக அமைப்பின் கீழ் இயங்குவதால் 25 வயதான இமானே கேலிஃப் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைப் போன்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதி சோதனையில் தோல்வி அடைந்த தாய்வானின் Lin Yu Ting எனும் வீராங்கனையும் ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவர் உஸ்பெகிஸ்தானின் Sitora Turdibekova எனும் வீராங்கனையை இலங்கை நேரப்படி இன்று(02.08) இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் எதிர் கொள்ளவுள்ளார்.

இவ்வாறு பாலின சோதனையில் தோல்வியடைந்த இரு நபர்கள் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பிலும் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மறுபுறம், இமானே கேலிஃப் ஆதரவாகவும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அவர் பிறப்பிலேயே பெண் என்றும், அவர் உரிய விதிமுறைகளுக்கு அமையவே போட்டியில் பங்கேற்றுள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வைரலாகிய குறிபார்த்துச் சுடும் வீரர்

இலக்கிற்குக் குறிபார்த்துச் சுடும் போட்டியில் யூசுப் டிகெக் (Yusuf Dikec) எனும் 51 வயதுடைய துருக்கி வீரர் போட்டியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றது.

10 மீற்றர் தூரம் கொண்ட கலப்பு பிரிவு போட்டியில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு போட்டியிட யூசுப் டிகெக் சாதாரணமாகப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

ஒரு கையை காற்சட்டை பையில் ஸ்டைலாக வைத்துக்கொண்டு மற்றைய கையில் துப்பாக்கியை ஏந்தி சாதாரணமாகப் போட்டியில் யூசுப் டிகெக் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.இதன் காரணமாகவே இவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

5வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் யூசுப் டிகெக் வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும். இந்தப் போட்டியில் சேர்பிய ஜோடி தங்கப்பதக்கத்தையும் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

ஒலிம்பிக்: பாலின சோதனையில் தோல்வியடைந்த வீராங்கனைக்கு மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version